மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது விஸ்வாசம் – பாடலாசிரியர் அருண் பாரதியுடன் நேர்காணல் !

1.பிறப்பு மற்றும் குடும்ப சூழல் பற்றி ??
ஊர் தேனிமாவட்டம் உத்தமபாளையம்…
2.முதல்வாய்ப்பும் அதன் அனுபவங்கள் பற்றியும்???
என் பாடல் பயணத்தின் முதல் வாசலைத் திறந்து வைத்தவர் என்
ஆசான். இயக்குநர்.கே.பாக்யராஜ் அவர்கள்தான். அவர்களிடம்தான் மூன்று ஆண்டுகள் நான் உதவியாளராக இருந்தேன். மெட்டுக்கு பாடல் எழுதும் பயிற்சியை கற்றுக் கொடுத்ததும் அவர்தான். அவரிடம் இருந்த மூன்று ஆண்டுகள்தான் சினிமா பற்றிய நிறைய புரிதல்கள் ஏற்பட்டது. உலக சினிமாக்கள் பார்த்தது… புத்தகங்கள் வாசித்தது… திரைக்கதை கேட்டது… கண்ணதாசன், வாலி, நா.காமராசன், முத்துலிங்கம் போன்ற கவிஞர் பெருமக்களிடம் எல்லாம் எவ்வாறு வேலை பார்த்தார் என்ற அவரது அனுபங்களை கேட்டு அறிந்தது…. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் திரையுலகில் எனக்கு நம்பிக்கையான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது திரு. விஜய்ஆண்டனி சார் அவர்கள்தான். அண்ணாதுரை திரைப்படத்தில் நான் எழுதிய தங்கமா வைரமா பாடல்தான் எனக்கு சினிமா வெளியில் பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் இன்று மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது விஸ்வாசம் திரைப்படம்.
3.தல அஜித் சந்தித்த தருணம் ? ஹைதராபாத் ராமோஜிவ் பிலிம்சிட்டி படப்பிடிப்பில்தான் முதன் முதலாக அஜித் சார் அவர்களை சந்தித்தேன். என்னுடன் என் மனைவியும் வந்திருந்தார். அந்த அழகான சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இயக்குநர் சிவா சார். நான் சந்தித்த அந்த கணத்திலேயே, “பாடல் நல்லா வந்திருக்கு. தாங் யூ சார்” என்று கைகொடுத்தார். உங்களுக்கு பாடல் எழுதியதற்காக நான்தான் நன்றி சொல்லணும் சார் என்று நானும் கைகொடுத்தேன். பிறகு இயக்குநர் சிவா சார், அஜித் சார் இருவரும் நிற்க, நடுவில் நான் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்… என் வாழ்வில் மறக்க முடியாத பொக்கிஷமான புகைப்படமாக அதை வைத்துள்ளேன். அந்த தருணத்தை மறக்க முடியாது.
4. இயக்குநர் சிவா பற்றி சில வார்த்தைகள்?
தூய்மையான இதயம். நேர்மையான வழியில் செல்பவர். தன் மனதுக்கும் அறிவுக்கும் சரி என்று பட்டதை மட்டுமே செய்வார். எந்த நேரத்திலும் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. எந்த நெருக்கடியான சூழலிலும் அதை சிரித்துக் கொண்டே கடந்து போகும் பக்குவம் அவருக்கு உண்டு. மற்றவர்கள் காயப்படும் படி சிறிதும் பேச மாட்டார். கடுமையான உழைப்பாளி… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சினிமாவைக் கடந்து அவருடன் நல்ல தோழமையோடு பயணிக்கவே ஆசைப்படுகிறேன்.
5.அடுத்து வருகின்ற பட வாய்ப்புகள் பற்றி சில வார்த்தைகள்??? அடுத்து களவாணி2, தில்லுக்குதுட்டு2, சின்னவீடு2, வால்டர், மரகதக்காடு, சிதம்பரம் இரயில்வேகேட், உள்ளிட்ட பதினைந்து திரைப்படங்களுக்கும் மேல் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கின்றேன். நிறைய புது இசையமைப்பாளர்களுடனும், இயக்குநர்களோடும் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.