பிளாஸ்டிக் தடை- எது உபயோகிப்பது ?எதுக்கு இந்த முடிவு?

“முன் அறையில இவ்வளவு குப்பை தூக்கி போட்டு வெச்சிருக்கிற? விருந்தினர்கள் வாராங்க, சீக்கிரமா மாத்து,” என்றார் அம்மா. போய் பார்த்த போது அங்கு  இந்த வருடம் முழுவதும் நான் தூக்கி எறிந்த பிளாஸ்டிக் குப்பைகள் எல்லாம் குவிந்து  கிடந்தது. இது எல்லாம் எப்படி இங்கே வந்தது? நான் இப்படி குப்பை போடரதில்லையே.

 விருந்தினர் வேறு வருகிறார்களே! என்று பதற்றத்தில் நான் சுத்தம் செய்ய, எடுக்க எடுக்க பிளாஸ்டிக் குப்பை வந்துகொண்டே இருந்தது.
தொண்டை குழியெல்லாம் வலிக்க ஆரம்பித்தது.விழித்தேன். 
அப்பாடா கனவு தான். பெருமூச்சுவிட்டேன். 
யோசித்தேன்.
 
எதற்கு இவ்வளவு குப்பை?
நான் தான் இப்படி செய்தேனா? 
பிளாஸ்டிக்கே உபயோகிக்காமல் என்னால் இருக்கமுடியுமா? ஒரே குழப்பம். 
இந்தியா நாள் ஒன்றுக்கு 15,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக்குப்பை கொட்டுகிறது. இதில்,
70% மறு உபயோகப்படுத்த முடியாத பிளாஸ்டிக்,
40% சேகரிக்கப்படாத அங்கங்கே கிடக்கும் பிளாஸ்டிக் என்று மத்திய மாசுகட்டுப்பாட்டு நிலையம் கூறுகிறது. 

ஜனவரி 1 (நாளை) முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க  அரசாணை பிறப்பித்துள்ளது. இது தமிழகத்தில் எங்கு ஒளிந்திருந்தாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதை பற்றிய விவரங்கள் இனி பார்க்கலாம்.

ஜனவரி 1 க்கு பிறகும் உபயோகப்படுத்த முடியும் பிளாஸ்டிக் பொருட்கள்:
குப்பை இடும் கருப்பு பை,
PET தர தண்ணீர் பாட்டில்,
வாளி, குடம், டப்பா,
பால் பை,
தானியங்கள் வைக்கும் பை,
அலுவலக கோப்பு(file),
 புத்தக உறை,
காகித குவளை(cup),
உபயோகப்படுத்த முடியாத
பிளாஸ்டிக் :


பிளாஸ்டிக் பைகள்,
துணி போல தோற்றம் அளிக்கும் ஆனால் பிளாஸ்டிக்காலான பை,
தண்ணீர் பை,
தெர்மக்கோல் குவளை மற்றும் தட்டுகள்,
உறிஞ்சு குழல் (drinking straw),
பிளாஸ்டிக் தாள்

இதற்கு எல்லாம் மாற்றாக என்ன தான் உபயோகிப்பது? இதோ சில ஆலோசனைகள்:

காகிதம் அல்லது சணல் பைகளை பயன்படுத்துவோம். விலை கூடுதலாக இருக்கிறதே என்று கவலை வேண்டாம்; எப்படியும் புது வருடம் முதல் அனைவரும் இதைதான் நாடி செல்வார்கள், கண்டிப்பாக விலை குறையும். 

பாக்கு மட்டை தட்டுகளில் அல்லது வாழை இலையில் மணம் வீச சாப்பாடு சாப்பிடுங்கள். உணவகங்களில் பெட்டலம் கட்டும்போது பிளாஸ்டிக் உருகி சாம்பாரில் படும் கவலை வேண்டாம், அலுமினியாப்பையில் கட்டிக்கொடுத்து விடுவார்கள். சுடுசுட ‘ஸ்டீல்’ குப்பியில் தண்ணீர் குடியுங்கள்.

பிளாஸ்டிக் உறிஞ்சு குழலால் கடல் வாழ் உயிரிகள் நாசமடைகின்றன. ஆமையின் மூக்கில்  உறிஞ்சு குழல் மாட்டிக்கொண்டு மூச்சித்திணரிய காட்சி  பார்க்க முடியவில்லை, மனம் கலங்கியது. இன்னொரு காட்சியில் ஆமையின் வயிறு முழுக்க பிளாஸ்டிக்கால் அடைப்பட்டிருந்தது. முடிந்தவரை பானங்கள் அருந்தும்போது கடைக்காரரிடம் உறிஞ்சு குழாய் வேண்டாம் என்று கூறிவிடுங்கள், கண்டிப்பாக வேண்டுமென்றால் காகித உறிஞ்சு குழாய்கள்  உபயோகியுங்கள்.

உங்களுக்கு இதெல்லாம் முக்கியமற்றவையாக இருக்கலாம். ஆனால் நாம் சாப்பிடும் சாப்பாடு, இந்த குப்பைகளெல்லாம் உண்டது தான் என்றால் பதைத்து போய்விடுவீர்கள். சான்றாக, ஆடு தெர்மக்கோலை உண்பது, பிறகு நாம் அந்த ஆட்டை ருசித்து ஒரு கட்டுக்கட்டுவது . 

அரசு என்ன செய்தது? 
புதுடெல்லி உலகசுற்றுலா மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2022 ஆண்டுக்குள் இந்தியாவில் நெகிழியை முற்றுலுமாக ஒழிக்க  முடிவுசெய்யதார்.
அதே நேரத்தில் நம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஆறே மாதத்தில் (ஜனவரி 1 முதல்) நெகிழியை முற்றுலுமாக ஒழிக்க அரசாணை கொண்டுவந்தார்.
இதற்கு தமிழ்நாட்டை ஆறு மண்டலங்களாக பிரித்து, இரு மண்டலங்களுக்கு ஒரு ஆட்சியர் வீதம் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் தேவையா?
இதை விட பெரிய பிரேச்சனைகள் இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தாலும் இது நம் உணவை சுகாதாரத்தை வரவிருக்கும் சந்ததிகளை பாதிகின்றது. இது பெரும் பிரச்னைதான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் பிளாஸ்டிிக் உபயோகித்து அதை குப்பை தொட்டியிலே போட்டாலும்
90% பிளாஸ்டிக்குகள் மறு சுழற்சி செய்யாத குப்பைகளாகின்றன.இவை ஒரு பெரிய குவியலாக சேர்ந்து மண்ணை, விலங்கினங்களை நாசம் செய்கிறது. உங்களுக்கு தெரியுமா? உங்கள் பிளாஸ்டிக் பாட்டில் மக்க 1000 ஆண்டுகள் எடுக்கும் என்று?பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் முன், இது குறித்து நன்கு சிந்தியுங்கள்.

மும்பையில் பிளாஸ்டிக் பையோடு நடந்து திரிந்தால் ஐயாயிரம் ரூபாய் தொகை அளிக்கவேண்டுமாம். தமிழகத்தில் அப்படி ஒன்றும் சட்டம் போடவில்லையே! பிறகு என்ன? என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும், பிளாஸ்டிக் குப்பை போடக்கூடாது என்று  கடைபிடிப்பது நம் மனதில் தான் உள்ளது.
இவ்வளவு மாசு உண்டாக்க கூடாது என்று என்னை போல பல பேர் விழிப்புணர்ச்சி இருந்தும் வேறு வழி இல்லாமல் முழிக்கின்றனர் இதற்க்கு முடிவு கட்டவுள்ளது இந்த அரசாணை! புது வருடத்திற்கு குப்பைகளை குறைக்க  உறுதி மொழி எடுக்கிறேன். நீங்க?Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares