உலக சுகாதார தினத்தில் கொரோனா விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட பாடலாசிரியர் அருண்பாரதி

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு “சரித்திரத்தில் நாம்” எனும் தலைப்பில், கொரோனா விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி. இதற்கு வால்டர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் தர்மபிரகாஷ் இசையமைத்துப் பாடியுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே முடங்கிப் போயுள்ளது. பொது மக்கள் அனைவரும் பணியிடங்களுக்கு செல்லாமல் தங்கள் வீட்டிற்குள்ளேயே வசித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக திரையுலக பிரபலங்கள் பலரும், வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதனிடையே, கரோனா வைரஸ் தொடர்பாக சில பிரபலங்கள் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தப் பட்டியலில் தற்போது திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதியும் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஸ்வாசம், சண்டக்கோழி2, கொலைகாரன், அண்ணாதுரை, காளி, திமிருபுடிச்சவன், தில்லுக்குதுட்டு2, வால்டர் போன்ற பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் சமூகக் கருத்துக்களை பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது இருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில்
கண் துஞ்சாமல் உழைக்கும் மருத்துவர்கள், காவல்துறையினர் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்தப் பாடலை எழுதியுள்ளதாகவும் முதலில் இதை ஒரு கவிதையாகத்தான் எழுதினேன். இசையமைப்பாளர் தர்மபிரகாஷ் முயற்சியில்தான் இது பாடலாக உருவானது என்றும் விரைவில் கொரோனா என்னும் இருளில் இருந்து மக்களுக்கு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பத் என்றும் அவர் கூறினார்.

அருண்பாரதி எழுதிய பாடலின் வரிகள் இதோ……

இசை & குரல் : தர்மபிரகாஷ்
வரிகள் : அருண் பாரதி

பல்லவி

எத்தனை போர்களை
தாண்டினோம்
எத்தனை வலிகளைத்
தாங்கினோம்

கொரனோ என்னும்
தொற்றுக்கா – நாம்
தோற்றுப் போகப் போகிறோம் ?

அனைவரும் ஒன்றாய்
இணைந்துதான்
வெற்றிகள் ஆயிரம்
தேடினோம்

இனி தனித்தனியாகப்
பிரிந்துதான்
வெற்றியைப் பார்க்க போகிறோம்

குழிகளைத் தோண்டிப்
புதைத்தாலும் – அதில்
செடியாய் நாங்களும் முளைப்போமே

வைரஸ் என்கிற
ஆயுதத்தை – எங்கள்
ஒற்றுமை கொண்டு உடைப்போமே

சரித்திரத்தில் நாம்….
சரித்திரத்தில் நாம்….

சரணம் – 1

வெள்ளை உடையில் இராணுவ வீரன்
நீயும் பார்த்ததுண்டா
கொள்ளை நோயில் மருத்துவன் தானே
இராணுவ வீரனடா

லத்திகள் இன்றி புத்திகள் சொல்லும்
போலீஸ் பார்த்ததுண்டா
போலீஸ் எல்லாம் போலிகள் இல்லை
காவல் சாமியடா

அழுக்கை எல்லாம்
அடித்து விரட்டும்
துப்புரவுத் தொழிலாளி

உலகில் கடவுள்
இருந்தால் அவன்தான்
அவனுக்கும் முதலாளி

தனியாய் இருந்து
தடுப்பவன் எவனோ
அவனே அறிவாளி

உயிரை எடுக்கும்
கொரோனா நோயின்
உயிரை எடுப்பாய் நீ

சரித்திரத்தில் நாம்….
சரித்திரத்தில் நாம்….

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares