இந்தோனேசியாவில் 168 பேருக்கும் மேல் உயிரிழப்பு, 700 பேர் காயம்

இந்தோனேசியாவில் சனிக்கிழமை ஏற்பட்ட சுனாமியால் 168 பேருக்கும் மேல் உயிரிழப்பு, 700 பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. எரிமலையினால் வந்த சுனாமி இந்தோனேசியாவின் கரையை நேற்று இரவு எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி தாக்கியது. இதனால் ஜாவா பகுதியிலும் சுமத்ராவிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கங்களாலும் சுனாமியாலும் பாதிக்கப்படும் நாடாக இருந்தாலும் இம்முறை அதற்கு ஏற்ற எச்சரிக்கை கொடுக்க முடியாததற்கு, இந்த சுனாமி வித்யாசமாக ஏற்பட்டதே காரணமாக கூறப்படுகிறது. எப்போதும் போல் கடலினுள் பூமியின் தட்டுக்கள் முட்டி இடம்மாறுவதினால் ஏற்படாமல், இம்முறை இந்தோனேசியாவில் வித்தியாசமாக ‘அனாக் கரகடவு’ என்ற எரிமலை தீவிலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவு கடலினுள் சென்றதாலும் முழுநிலவினால் ஏற்பட்ட சீற்றத்தினாலும் இருக்கலாம் என்று இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
ஜாவா பகுதியிலுள்ள ‘பாண்டேக்கலாங்’ என்ற இடத்தில் மோசமான பேரிடர் ஏற்பட்டு 33 உயிர்களை வாங்கியது. இன்னும் காணாமல் போன பலரை உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். செப்டம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் 2500 பேர் உயிரிழந்தனர். மீண்டும் மீண்டும் ஏற்பட்ட பேரிடரினால் நாட்டு மக்களின் நிலை பாதிப்புக்குள்ளாகியது.
