வீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது?

நல்ல உரம் மண்ணோடு மண்ணாக கலந்திருக்கும். மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களும் புழுக்களும் உயிரோட்டமாக இருக்க உதவ வேண்டும். உயிரிகள் இல்லாத மண் உயிரற்ற மண்ணாகி செடிகளும் உயிரற்று போய்விடும். ரசாயன உரங்களை நாடாமல் விலையில்லாமல் பெருகும் குப்பைகளை வைத்தே எல்லா செடிகளுக்கும் உரம் இடலாம்.

முதலில் ஒரு கூடை அல்லது ஏதாவது ஒரு பக்கெட்டை எடுத்து கொள்ளுங்கள். நல்ல காத்தோட்டமாக இருக்கும் அளவிற்கு எல்லா பக்கங்களிலும் துளை இடுங்கள். நெகிழி பக்கெட் என்றால் சுட சுட நெருப்பில் காட்டிய பழைய இரும்பு கத்தி வைத்து துளையிடலாம், அல்லது துளையிடும் கருவி கொண்டு கூட ‘சர்ர்ரூ.. புர்ரூ..’ என்று துளையிடலாம்.

வீட்டில் இருக்கும் காய்கறி கழிவுகள், டீ தூள் கழிவு, முட்டை தோடு எல்லாம் நைட்ரஜன் கொண்டது. இவை மண்ணில் பல ஜந்துக்களுக்கு உயிர் சத்து கொடுக்கும். ஆனால் வெறும் காய்கறி கழிவுகளை மட்டுமே மக்க விட்டால் மண் போன்ற கலவை கிடைக்காது, அழுகி போன வாடையோடு கூடிய அழுக்கு தண்ணீர் போல ஏதோ ஒன்று கிடைக்கும்.

மண் போல கிடைக்க என்ன செய்ய? அதற்கு நிறைய கார்பன் குப்பை தேவை. அதாவது, காய்ந்த இலைகளோ அல்லது கிழித்து போட்ட காதல் கடிதங்களோ, பழைய நாளிதாழ்களோ போட்டு கொள்ளலாம். வழு வழுப்பான சீக்கிரம் மக்காத காகிதங்களை மட்டும் தவிர்த்து வேறு எல்லா வகை காகித குப்பைகளையும் நார் நாராக கிழித்து போடவேண்டும்.

நினைவிருக்கட்டும், நைட்ரஜன் ஆன காய்கறி கழிவுகளை விட கார்பன் கழிவுகள் நிறைய இருக்க வேண்டும் அப்போது தான் நல்ல மண் பருவத்தில் உள்ள கருப்பு உரம் கிடைக்கும்.

சீக்கிரம் உரம் கிடைக்க மண் புழுவை இதில் வளர்ப்பது அறிவாளித்தனம். இந்த சிவப்பு நிற புழுக்கள், காய்ந்த இலைகளுக்கு அடியிலோ, செடி சட்டிகளுக்கு அடியிலோ ஒளிந்திருக்கும். இதை வேட்டையாடி எடுக்கவும். இப்புழுக்கள் குப்பைகளை உண்டு உடனே உரமாக மாற்றுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

நல்ல உரம் கிடைக்க காற்று தேவை. இந்த புழுக்கள் நெளிந்து ஓடும்போது மண்ணுக்குள் காற்று புகுகிறது அப்போது பிராணவாயுவை சவாசிக்கும் நுண்ணுயிரிக்களின் வாழ்விடமாக இது அமைகிறது.

காற்றில்லாமால் மூடி வைத்திருக்கும் டப்பாவை உரத்தொட்டியாக அமைக்கிறீர்கள் என்றால் அதில் காற்று இன்றி வாழும் நுண்ணுயிர்கள் பெருகும். காற்று இன்றி வாழும் இவ்வுயிரிகள் மெதுவாக தான் குப்பைகளை மக்க வைக்கும், இப்படி இருக்கும நிலையிலும், காற்று இல்லாமல் குப்பை மக்கத்தான் போகிறது. ஆனால் உரம் சுருங்கி போய் கொஞ்சமாக தான் கிடைக்கும்.

காற்றில்லா உரத்தோட்டியில் பல சிக்கல்கள் இருக்கிறது. காற்றில்லாமால் குப்பைகள் சூடு பிடிக்காது; சூடின்றி மோசமான நுண்ணுயிர்கள் பெருகும்; அவை நம் உடலில் ஊடுருவினால் பெருந்தீங்கு விளைவிக்கும். மேலும் இதிலிருந்து வாடை இல்லாத நல்ல உரம் கிடைக்க ஒரு வருடம் கூட எடுக்கலாம். அதுவும் நல்ல மண் போன்ற கலவை கிடைக்க காற்றில்லா உரத்தோட்டி (anaerobic compost) செய்யும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். காற்றோட்டமான உரத்தொட்டி தயாரிப்பதே மிகவும் எளிமையான வழி. உயிரோட்டமான மண்ணின் மணம் கமழும், மோசமான வாடையும் எடுக்காது.

Follow us :

Share

likeheartlaughterwowsadangry
0

2 thoughts on “வீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares